இலங்கைத்
திருநாட்டில் இணையற்ற கலைப் பாரம்பரியத்துடன் கூடிய புராதன இடங்களில்
ஒன்றாக சிகிரியா விளங்குகிறது.முதலாம் காசியப்ப மன்னனால் (47795)
உருவாக்கப்பட்ட சிகிரியா நகரின் எச்சங்கள் செங்குத்தான பகுதிகளில் இன்றும்
காணப்படுகின்றன. சுமார் 370 மீற்றர் உயரக் குன்றில் (சிங்கக் குன்று)
இருந்து எல்லா பக்கத்திலும் உள்ள காடுகளைப் பார்க்க முடியும். இலங்கையின்
கட்டிடக் கலை மரபு சிகிரியாவில் மிக அழகாக தோன்றுகிறது. ஆசியாவில் மிகச்
சிறப்பாக பேணப்படும் நகராக இந்நகரம் கட்டிடங்கள், நந்தவனங்கள், பாறைகள்,
நீர்த்தோட்டங்கள் மற்றும் இயற்கை செயற்கைத் திட்ட அமைப்பின் எழிலோடு
விளங்குகின்றது. இன்றும் அதன் பழைய அமைப்பின் கம்பீர அழகைக் காட்டுவதாக
உள்ளது.
சிகிரியாக்
குன்று சிற்பங்கள் 6ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை என வரலாறுகள்
எடுத்தியம்புகின்றன. இக்கோட்டையை காசியப்பன் எதிரிகளிடம் இருந்து தன்னைப்
பாதுகாத்துக் கொள்வதற்காக அமைத்தான் என வரலாறு கூறுகிறது.
துலங்காத மர்மங்கள்
லௌவீகம்,
ஆத்மீகம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் சிகிரியா ஓவியங்கள், மன்னன்
காசியப்பன் அனுராதபுரத்திலிருந்து சிகிரியாக் குன்றை ஏன் தெரிவு செய்தான்?
ஓவியங்களில் உள்ள பெண்கள் யார்? என்பன போன்ற மர்மங்கள் சிகிரியா
அமைக்கப்பட்டு 1500 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், துலங்காமல்
தொடர்கின்றன.
யார் இந்தப் பெண்கள்?
சிகிரியா
ஓவியங்கள் சித்தரிக்கும் பெண்கள் புத்தரைத் தரிசிக்கச் செல்லும் மகளிர் என
வரலாற்றாசிரியர்களால் நம்பப்படுகிறது. அவர்கள் கைகளில் ஏந்தியிருக்கும்
அல்லி மலர்கள், முகத்தில் வெளிப்படும் பக்தி உணர்வு ஆகியவற்றை சில
வரலாற்றாசிரியர்கள் இதற்குச் சான்றுகளாக முன்வைக்கின்றார்கள். இந்தப்
பெண்கள் காசியப்பனின் அந்தப்புரத்து மகளிர் என்றும் கருதுகின்றனர் சில
வரலாற்றாசிரியர்கள். யார் இந்தப் பெண்கள் என்ற வினாவுக்கு விளக்கம் இதுவரை
எந்த வரலாற்றாசிரியராலும் முழுமையாக முன்வைக்கப்படவில்லை. துர்க்குணங்கள்
நிறையப் பெற்ற காசியப்ப மன்னனின் அரண்மனையில் பெண்கள் அடிமைகளாக
இருந்திருக்கிறார்கள் எனவும் நம்பப்படுகிறது. எதுவாக இருந்தபோதிலும்
பெண்களின் இடையமைப்பு, முக அமைப்பு என்பன அஜந்தா ஓவியம் மற்றும் பல்லவர்
கால சித்தான வாசல் ஓவியங்களின் சாயல்களைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னன் வரைந்த ஓவியங்கள்
சிகிரியாவில்
மொத்தம் 27 ஓவியங்கள் ஆரம்பத்தில் காணப்பட்டன. தகுந்த கவனிப்புகள் இன்றி
அவை அழிந்து விட்டன. தற்போது ஏழு ஓவியங்கள் மாத்திரம் காணப்படுகின்றன.
ஓவியங்கள் அனைத்தும் காசியப்பன் மன்னனாலேயே வரையப்பட்டுள்ளது.
சுண்ணாம்பு,
தேன், கபுக்கல் போன்றவற்றைக் கலந்து பாறையில் பூசிய தளத்திலேயே (ஈரம்
காய்வதற்கு முன்) ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் ஈரச் சுதை
ஓவிய வகைக்குள் உள்ளடக்கப்படுகிறன. ஓவியங்களுக்கு இயற்கையான வர்ணங்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது மரத்திலிருந்து கிடைக்கப்படும் பசைவகை
(மரத்திலிருந்து பசை வடியும் போது ஒரு நிறமாகவும் சற்று நேரம் செல்ல வேறு
நிறமாகவும் சில நாட்கள் கழிய கறுப்பு நிறமாகவும் மாறும் தன்மை கொண்டது.
இந்த நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.), பரப்பட்டைச் சாயம்
என்பனவாகும்.
கண்ணாடிச்சுவர்
( தற்போது மங்கலாகக் காட்சி தருகிகிறது) தேன், கபுக்கல் கொண்டு ஓவியம்
வரைவதற்கு தயார் செய்யப்பட்ட பகுதியாகும் இது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால்
ஓவியங்கள் வரையப்படவில்லை.
பாதுகாப்பா? கலைத்துவமா?
காசியப்பன்
சிரியாவில் பாதுகாப்பானதும், கலைத்துவமானதுமான கோட்டையை அமைத்து,
அனுராதபுரத்திலிருந்து தலைநகரை இங்கு மாற்றிக் கொண்டான் என வரலாறு
கூறுகின்றது. 600 அடி உயரமான குன்றின் மீது இவன் அரண்மனயை அமைத்தான்.
படிக்கட்டுகள் மூலம் மலையின் நடுப்பகுதிக்கு போக முடியும். இதிலிருந்து
மலையின் வடக்குப்பக்கத்திலுள்ள மேடைக்கு போக முடியும். இம் மேடையிலிலுந்து
படிக்கட்டுகள் மண்ணினால் அமைக்கப்பட்ட ஒரு பெரிய சிங்கத்தின் கடைவாய்க்கு
ஊடே உயர்ந்து செல்கின்றன. குன்றின் உச்சியில் அரண்மனை அத்திவாரத்தின்
சிதைவுகள் காணப்படுகின்றன. இது தேவ அரசர்களின் அரண்மனைக்குச் சொல்லப்பட்ட
விதிகள் அடங்கிய அமைப்பையும் கொண்டுள்ளது. இயற்கையான மூன்று ஊற்றுகள்,
பூங்கா, மன்னன் மகாராணி குளிக்கும் தொட்டி போன்றவை இன்றும் சிதைவுகளுடன்
காணப்படுகிறன. மேற்குப்புற பாறைச்சுவரில் சிகிரியா ஓவியங்கள்
தீட்டப்பட்டுள்ளன.
குன்றின்
கிழக்கும் மேற்கும் மதில்களாலும் அகழிகளாலும் அரண்
செய்யப்பட்டிருக்கின்றன. மதிலின் சில பகுதிகள் இன்றும் அழியாமல்
இருக்கின்றன. இம் மதிலின் சில பகுதிகள் 30 அடி உயரமுடையன. அகழி 14 அடி
ஆழமும் 82 அடி அகலமும் கொண்டது. பாதுகாப்புக்காக நிறுவப்பட்டது என
நம்பப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட இலட்சியம் அல்லது கலைநோக்குக் கொண்டு
நிர்மாணிக்கப்பட்டதாகவே கருதப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி,
விஞ்ஞான, பண்பாட்டு அமைப்பினால் (யுனெஸ்கோ) கலாசார முக்கியத்துவம் வாய்ந்த
இடமாகத் தெரிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய இடமாக 1982
இல் சீயகிரி என்ற சிகிரியா அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைக்கப்படும் மன்னனின் வரலாறு
சிங்கள
வரலாற்றுக் குறிப்புகளில் காசியப்பன் மன்னனுக்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட்டிருக்கவில்லை. இவனது பாவச்செயல் பற்றியே (தந்தையைக் கொன்றமை)
மிகுதியாகக் கூறப்படுகிறது. மாகாவிகாரைப் பிக்குகள் இவன் வழங்கிய கொடைகளை
ஏற்க மறுத்ததாக சூளவம்சம் கூறுகின்றது. குறிப்பாக காசியப்பனுக்கு வரலாற்று
முக்கியத்துவம் கொடுத்த சிகிரியா பற்றி முழு விபரங்களையும் அறிய முடியாமல்
ஊகங்களையும் மனம் போன போக்கில் கூறப்படும் கருத்துக்களையும் கேட்கும்
நிலையில் இருக்கின்றோம்.
அனுராதபுரத்தைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த தாதுசேனனுக்கு மூன்று குழந்தைகள்.
மூத்தவன் காசியப்பனின் தாய் தாழ்ந்த சாதி என்பதால் சிம்மாசனத்துக்கு
அருகதையற்றவனானான். முகலன் பட்டத்தரசியின் மைந்தன்; சிம்மாசனத்துக்கு
உரியவன். மூன்றாவது குழந்தை சேனாதிபதியை மணந்து கொண்டாள். மகளை மாமியார்
கொடுமைப்படுத்தியதால் அப்பெண்ணை தாதுசேனன் எரித்துக் கொன்றுவிட்டான்.
இதனால் சேனாதிபதி தாதுசேனனுக்கு விரோதியானான். சிம்மாசனத்தைக் கைப்பற்ற
சமயம் பார்த்துக்கொண்டிருந்த காசியப்பனுடன் சேர்ந்து தாதுசேனனை
எதிர்த்தான். தந்தையைச் சிறையில் தள்ளி, சிம்மாசனத்தைக் கைப்பற்றியதுடன்
தந்தையையும் கொன்றான். தம்பி முகலனையும் ஒழித்துவிட முயல, அவன்
இந்தியாவுக்கு தப்பி ஓடினான்.
காசியப்பன்
அனுராதபுரத்திலிருந்து சிகிரியாவுக்கு தலைநகரை மாற்றிக் கொண்டமையானது,
முகலன் தென்இந்தியாவிலிருந்து பெரும்படையோடு வந்து தன்னை எதிர்ப்பான் என
அஞ்சியே இந்த பாதுகாப்பான இடத்தைத் தெரிவு செய்ததாக சில வரலாற்றாசிரியர்கள்
கூறுகிறார்கள். அனுராதபுர மக்களுக்குப் பயந்து சிகிரியாவுக்கு
சரண்புகுந்ததாக வேறு சிலர் கருதுகின்றார்கள். சிகிரியாக் கோட்டையை அமைக்க
ஐந்து ஆண்டுகள் கழிந்தன. மக்களுக்குப் பயந்த அரசன் தற்காலிகமாக ஒதுக்கிடம்
தேடுவானேயன்றி இவ்வளவு நீண்ட காலத்தில் அமைக்கப்பட வேண்டிய ஒரு இடத்தை
தெரிவுசெய்தான் என்பதும் பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது.
காசியப்பன்
தன்னைக் கடவுளாகக் கருதினான் என்றும் சிலர் கருதுகின்றார்கள். அக்காலத்து
தேவராசர் உயர்ந்த மலைகளில் அமைக்கப்பட்ட விசேட அரண்மனைகளில் வாழ்ந்தார்கள்.
இக்காரணத்தால் காசியப்பன் சிகிரியாவைத் தலைநகராக்கினான் என சில
வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றார்கள்